30.6.05

அந்தக் காலத்து யாழ்ப்பாணம் - வெளியீட்டு விழா

-மூனா-

"புத்தக வெளியீட்டு விழாவொன்றுக்குப் போறன். நீயும் வரப்போறியோ?" அண்ணன் கேட்டார். „

“என்ன புத்தகம்? “

"அந்தக் காலத்து யாழ்ப்பாணம்” புத்தகத்தின் தலைப்பே புத்தக வெளியீட்டு விழாவிற்கு என்னை இழுத்தது.

புத்தக வெளியீட்டு விழாவிற்கே நான் வந்திருந்தேன். ஆனால் பார்வைக்கு அது பொங்கல் விழாவாக இருந்தது. அதுவும் முதியவர்கள் இணைந்து வழங்கிய பொங்கல் விழா. இருக்கைகளில் ஆறஅமர இருந்தவர்கள், அங்குமிங்கும் ஓடித் திரிந்தவர்கள், வந்தவர்களுக்கு பொங்கல், வடை, பாயசம் வழங்கியவர்கள் என்று எல்லோருமே முதியவர்கள். கண்ணுக்குப் பட்ட இடமெல்லாம் முதிய அலைகளே. மேடையில் நிகழ்ச்சிகளை மட்டும் இளையவர்களே தந்து கொண்டிருந்தார்கள். அங்கிருந்த பெரிசுகளில் சிலரது பேரப்பிள்ளைகளாக இருக்க வேண்டும்.

புத்தக வெளியீடு என்று அண்ணன் சொன்னார், இது பொங்கல் விழாவாக இருக்கிறதே. ஓருவேளை நிகழ்ச்சியை மாற்றி விட்டார்களா? இல்லை நாங்கள்தான் மண்டபம் மாறி வந்து விட்டோமா? சந்தேகத்துடன் அண்ணனைப் பார்த்தேன். பார்வையிலேயே என் சந்தேகத்தைப் புரிந்து கொண்டார்.

„"இது முதியோர் நடத்தும் விழாதான். புத்தகம் எழுதியவருக்கு வயது 83. பொங்கல் விழா முடிய புத்தகம் வெயிளிடுவினம்.“ அண்ணனிடம் இருந்து வந்த பதில் சந்தேகத்தைத் தீர்த்தது.
முதியோர்கள் நடாத்தும் ஒரு விழாவில் ஒரு முதியவர் தனது அந்தக் காலத்து நினைவுகளை அசைபோட்டு அரங்கேற்றுவது முற்றிலும் பொருத்தம்தான்.

பொங்கல் விழா முடிந்தவுடன் புத்தக வெளியீட்டுக்கான ஆயத்தங்கள் நடந்தன. மேசைகள், நாற்காலிகள் எல்லாம் மேடைக்கு அருகே போடப்பட்டன. முதியோர்கள் மேடையேறி இறங்க சிரமப் படுவார்கள் என்ற எண்ணத்திலா அல்லது வந்திருந்தவர்களுடன் நெருக்கமாக நின்று புத்தகத்தை வெளியிட வேண்டும் என்ற காரணத்திலா தெரியவில்லை. நானும் அண்ணனை கேள்வி கேட்டு சிரமப் படுத்த விரும்பவில்லை.

புத்தக வெளியீட்டு விழாவிற்கு சட்டத்தரணி சிறிஸ்கந்தராஜா தலைமை வகித்தார். தனக்கும் தன் மாமன் மகளுக்கும் ஏன் திருமணம் நடைபெறாமல் போயிற்று என்று தனது அந்தக்காலத்து நினைவுகளில் அதிகம் மூழ்கியதால், வெளியிடப்படும் புத்தகத்தைப் பற்றி அதிகம் கதைத்ததாகத் தெரியவில்லை. திடீரென அவர் தனது அந்தக்கால நினைவை விட்டு நிகழ்காலத்திற்கு வந்து புத்தகத்தில் உள்ளதைத் தொட்டுச் சென்றதுடன் சரி.

தமிழில் நன்றாகப் பேச வராது என்பதால் ஆங்கிலத்திலும் ஆய்வு நடந்தது. இந்தப் புத்தகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ஆங்கிலம் பேசும் இளைய தமிழ்ச் சமுதாயமும் அன்றைய எமது வாழ்க்கையை தெரிந்து கொள்ள வழி செய்ய வேண்டும் என சிலர் கேட்டுக் கொண்டனர். இன்னும் ஒருபடி மேலே போய் இதை இலங்கையில் பாட நூல் ஆக்க வேண்டும் என்ற வேண்டுகோளும் வைக்கப் பட்டது.

எழுத்தாளர் முருகபூபதி சிறப்புரை வழங்கினார். முதற் கூட்டத்தில் அவரிடம் கேட்ட ஒரு அரசியற் கேள்விக்கு புத்தக வெளியீட்டு விழாவில் வைத்து பதில் தந்தார். கேள்வி கேட்டவர் தற்சமயம் இந்த மண்டபத்தில் இல்லை ஆனாலும் நான் பதில் அழிக்க வேண்டியவனாக இருக்கிறேன் என்று அவர் கூறியது எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. அப்படியாயின் யாருக்கு அந்தப் பதில்? யாராவது கேட்டுவிட்டு அந்த அன்பரிடம் போய் சொல்வார்கள் என்ற எண்ணத்திலா?

அப்படி இப்படி என்று அந்தக் காலத்து யாழ்ப்பாணம் என்ற அந்த நூலின் ஆய்வு முடிந்து அதன் எழுத்தாளர் சிசு. நாகேந்திரன் தனது உரையில் எல்லோருக்கும் நன்றி சொல்லி, அந்த நூலின் விற்பனை கடற்கோள் அனர்த்தத்தில் பாதிப்புக்குள்ளானவர்களுக்கான புனரமைப்புக்கு வழங்கப்படும் என அறிவித்த போது அந்த 83 வயது இளைஞனின் பெரிய மனது தெரிந்தது. அந்த இனிய நினைவோடு புத்தகத்தைப் புரட்டிய போது அந்தக்கால யாழ்ப்பாணம் அப்படியே கண்ணில் தெரிந்தது.

- மூனா -

Keine Kommentare: